Search This Blog

Thursday, October 04, 2012

சிறு குழந்தை வளர்ப்பு ஒரு வயது வரை...


கால் முளைத்த வானவில் க்ளுக் என சிரிக்கும் தளுக் என முறைக்கும்  உதடுகளால் உதைக்கும் தத்தித் தாவி நடக்கும் இந்த ‘வானவில்’ எதையாவது எடுக்கிறது... கடிக்கிறது... தடுத்தால் முறைக்கிறது. அல்லது ங்கே என அழுகிறது. மெல்லப் புரளும். சுவரைப் பற்றிக்கொண்டு நடக்க முயற்சிக்கும். எழுந்து உட்காரும். சுற்றிலும் இருக்கும் பொருட்களைத் தொட்டு, பிடித்துப் பார்த்து, கடித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கும். உங்களின் அத்தனை பேச்சுக்கும் எதிர்பேச்சுப் பேசும். தண்ணீர் டம்ளரை எடுக்க முயற்சிக்கும். ‘ம்மா’, ‘ப்பா’, ‘தாத்தா’ என தனது மழலை இசையால் மயங்க வைக்கும். பட்டுரோஜாவைப் போல தொட்டிலில் படுத்திருந்த அந்தப் பட்டுக்குட்டி உருண்டு, புரண்டு, தவழ்ந்து, எழுந்து நடக்க முயற்சிக்கும். ஒரு ரோஜாத் தோட்டம் போல கைகளை நீட்டியபடி, ‘அச்சச்சோ விழுந்துடுவானோ’ என நம்மைப் பதற வைத்து, வேகமாக வந்து கழுத்தைக் கட்டிக்கொள்ளும் அழகே அழகு. அப்போது முத்தமிடும் மகிழ்வின் சுகம் தாய்மையின் வரம்.

6 மாதம் முதல் 1 வயது வரை குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம் தருகிறார் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் உஷா இளங்கோ. ‘‘ஆறாவது மாதத்தில் குழந்தைகள் தாய்ப்பாலில் இருந்து திட உணவுப் பழக்கத்துக்கு மாறுகின்றனர். இடையில் தாய்ப்பாலோ, தேவைப்பட்டால் பசும்பாலோ தரலாம். புரதம், மாவு, கொழுப்பு உள்ளிட்ட அனைத்து சத்துகளும் உள்ள சரிவிகித சத்துணவு அவசியம். குழந்தைக்கு ‘பிகேவியரல் செட்டப்’ அவசியம். சின்னச் சின்ன விஷயங்களில் கூட பழக்கவழக்கத்தை நடைமுறைப்படுத்தும் உத்திகளை கையாள வேண்டும். 

மூன்று வேளைக்கும் உணவாக வெறும் சாதம் அல்லது இட்லி என ஏதாவது ஒன்றை வயிறு முட்ட சாப்பிட வைப்பதற்கு பதிலாக, காலையில் பசிக்கத் தொடங்கும்போது கொஞ்சம் சூப், வேக வைத்து மசித்த காய், மதியம் பருப்பு சாதம், ஏதாவது ஒரு பழவகை என கலந்து கொடுக்கலாம். அப்போதுதான் குழந்தைக்கு வெவ்வேறு சுவைகள் கிடைக்கும். மல்ட்டி வைட்டமின் சத்துகள் கிடைக்கும். அடம் பிடிக்காமல் சாப்பிடவும் பழகுவார்கள். 

குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம், ஏப்பம், சூடு போன்ற பிரச்னைகளுக்கு சீரகம், வெந்தயம் போட்டுக் கொதிக்க வைத்த தண்ணீரைத் தருவதன் மூலம் தீர்வு காணலாம்.  மருத்துவமனையில் தரப்பட்டுள்ள தடுப்பூசி அட்டவணையை சரியாக கவனித்து, குறித்த காலத்தில் குறித்த ஊசியைப் போட்டு விட வேண்டும். 9ம் மாதத்தில் தட்டம்மை தடுப்பூசி போட வேண்டும்.  

குழந்தைகள் தங்கள் கைக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் வாயில் வைத்து, சுவைத்துப் பார்த்து, ஆராய்ச்சி செய்யும் காலம் இது. அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். விளையாட்டுப் பொருளை குழந்தைகள் விழுங்கும் அபாயம் உள்ளது. குழந்தைக்கு கிருமித்தொற்று ஏற்படாமலிருக்க, விளையாட்டுப் பொருட்களை கழுவிப் பயன்படுத்த வேண்டும். 

6 மாதத்துக்கு மேல் குழந்தைகளை அடிக்கடி வெளியில் எடுத்து சென்றால் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புண்டு. வெளியில் செல்லும்போதே குழந்தைக்கான உணவையும் பாதுகாப்பான குடிநீரையும் எடுத்துச் செல்ல வேண்டும். வெயில், நெருக்கமான கூட்டத்தில் குழந்தையை நீண்ட நேரம் அழ விடுவது போன்ற செயலைத் தவிர்க்கலாம். மற்றவர்கள் கொஞ்சும் போது கிருமித் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதிலும் தாய் கவனமாக இருக்க வேண்டும். 

வெயில், மழை, குளிர் என தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தாற்போல குழந்தைகளுக்கு நோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முன் கூட்டியே யோசித்து உடை, உணவு முறை ஆகியவற்றில் தேவையான மாற்றத்தை செய்யலாம். குளிர், மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல், சளி உள்ளிட்ட தொந்தரவுகள் வரலாம். வெயில் காலத்தில் அஜீரணம், வியர்க்குரு ஏற்படும். தொடர் அழுகை, உணவு மந்தம், இருமல், தும்மல், தூக்கமின்மை போன்ற சங்கடங்கள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை கேட்டு மருந்து தர வேண்டும். நாம் தரும் மருந்து காலாவதியாகிவிட்டதா என்பதை கொடுப்பதற்கு முன் சோதிக்க வேண்டும். காலாவதியான எந்த மருந்தையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது.  

தவழ ஆரம்பிக்கும் வயதில் குழந்தைகளை அதன் போக்கில் கீழே விட வேண்டும். நிலத்தில் முட்டியை வைத்து குழந்தைகள் தவழ்ந்தால் அந்த இடத்தின் தோல் பகுதி கருப்பாகி விடும் என்று சிலர் குழந்தைகளைத் தவழ விடாமல் தடுக்கின்றனர். இது தவறு. வீட்டில் குறைவான இடம் இருந்தால்கூட அவர்களைத் தவழ விட வேண்டும். அப்போதுதான் முட்டித் தசைகளில் இயக்கமும் எலும்பில் வலிமையும் உண்டாகும். முட்டியைப் பயன்படுத்தி தவழும்போது வயிறு, முதுகெலும்புக்கான பயிற்சியும் கிடைக்கும். 

குழந்தையின் மூளை வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அதற்கான சின்னச் சின்ன பயிற்சிகளைத் தாய் தொடங்க வேண்டும். அடர் வண்ணங்கள் கொண்ட சிறிய அட்டைகளைக் காட்டி விளையாடலாம். உருவங்களைக் காட்டி அவற்றின் பெயர்களை சொல்வது, வெவ்வேறு சத்தங்களை எழுப்பி விளையாட்டுக் காட்டுவதையும் குழந்தைகள் ரசிப்பார்கள்.  

சாப்பாடு ஊட்டுவதை சுலபமாக்க குழந்தைகளை டிவிக்கு முன்னால் அமர வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒரு விஷயத்தில் சில நிமிடங்கள் மட்டுமே குழந்தைகள் ஈடுபாடு காட்டும். டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்டால் குழந்தைகள் உணவின் சுவையை அறிந்து சாப்பிட மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடவும் வாய்ப்புள்ளது. கார்ட்டூன் பாடல்களைக்கூட அதிகபட்சமாக அரை மணி நேரம் மட்டுமே பார்க்க அனுமதிக்கலாம். 

இசை கேட்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தலாம். 6 மாதங்களில் அவர்களுக்குப் புரியும்படி கைகள், முகபாவனைகள் மூலம் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லலாம். பொம்மைகளையும் பொருள்களையும் வைத்துக்கொண்டு கதை சொல்லி, நடித்துக் காட்டினால் குழந்தைகள் மகிழ்வார்கள். அவர்களது கற்பனை உலகமும் விரிவடையும். இரவு தூங்கப் போவதற்கு முன்னால், கதை சொல்வதை வழக்கப்படுத்தினால் அவர்களுடைய தூக்கம் இனிமையாகும். தாய், புத்தகம் படித்துக் கதைகள் சொல்லும் போது, அவர்களுக்கும் படிக்கும் பழக்கம் தானாக வந்து விடும். 

நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டிய காலம் இதுதான். வழக்கமாக குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் பாட்டியைப் பயன்படுத்தி குழந்தைகளை அதில் உட்கார வைத்து சிறுநீர் போக சொல்லித்தர வேண்டும். முதலில் அடம்பிடித்தாலும் பின்னர் பழகிக் கொள்வார்கள். பாட்டியில் அமர வைத்து பழக்கப்படுத்தும் போது படுக்கையை நனைக்கும் பழக்கமும் மாறும். மலம் கழிப்பதையும் பழக்கப்படுத்த வேண்டும். 

வாயில் விரல் சப்புவதைத் தடுக்க, அதற்கான கிளவுஸ் பயன்படுத்தலாம். விளையாடி முடித்தவுடன் அனைத்து பொருட்களையும் சேகரித்து பையில் போட்டு, அதற்கான இடத்தில் வைக்க வேண்டும். சாப்பிட வைக்க அம்மா தட்டுடன் சாலையில் நிற்பது தவறு. தினமும் குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதைப் பழக்கப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் ஒவ்வொரு விஷயத்துக்கும் அடம் பிடித்தாலும் போகப் போகப் பழகுவார்கள். 

குழந்தைகள் துறுதுறுவென இருக்கும் காலம் இது. அதற்காக டென்ஷன் ஆகவேண்டியதில்லை. சுறுசுறுப்பாக விளையாடினால்தான் ‘மோட்டார் டெவலெப்மென்ட்’ நன்றாக இருக்கும். குறிப்பிட்ட மாதத்தில் பார்த்தல், கேட்டல், புரிந்து கொள்ளுதல்,  எதிர்வினையாற்றுவதில் தாமதம் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற வேண்டும். ‘குழந்தையின் மாமா ஒரு வயதில் நடந்தார்’, ‘அப்பா இரண்டு வயதில்தான் பேசினார்’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு, மருத்துவரிடம் ஆலோசிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது.

ரெடிமேட் உணவுகள், கலர்ஃபுல் உணவுகள், மூளையை வளர்க்கும் உணவுகள் என விளம்பரங்களை முழுக்க நம்பிப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு டம்ளர் பாலில் அத்தனை சத்துகளும் கிடைக்காது. குழந்தைகளுக்கு இரண்டு வேளை மட்டும் பால் கொடுத்தால் போதும். திட உணவு தராமல், பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு சத்துக்குறைபாடு ஏற்படும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையவும் வாய்ப்புள்ளது. சத்துக்குறைபாடு, குழந்தைகளுக்கு நோய் வாய்ப்பை அதிகரிப்பதுடன் வளர்ச்சிக் குறைபாட்டையும் உண்டாக்கும். விளம்பரங்களைப் பார்த்து குழந்தையை சோதனை எலியாக பயன்படுத்தக்கூடாது’’ என்று எச்சரிக்கிறார் டாக்டர் உஷா. 

நீங்கள் யானை. அவன் யானைப் பாகன். அவனுக்குத் தெரிந்த மொழியில் விரட்டுகிறான். அந்தக் கட்டிவெல்லத்தின் மந்திரக்கோலின் முன் வீட்டில் உள்ள அத்தனை பேரும் சொன்னதைச் செய்யும் சமர்த்து பொம்மைகள்தான். 6 மாதம் வரை குழந்தையை கையில் எடுப்பது, தூங்க வைப்பது என்று அனைத்தையும் அம்மாவே செய்து கொண்டிருப்பார். 6 மாதத்துக்குப் பிறகுதான் குழந்தைக்கும் தந்தைக்குமான நெருக்கம் அதிகரிக்கும். மடியில் கிடத்தி விளையாட்டுக் காட்டுவது, விரல் பிடித்து நடக்க வைப்பது... இப்படி குழந்தையின் மீது, தான் வைத்திருக்கும் அன்பை தந்தை வெளிப்படுத்தலாம். 
உங்கள் செல்லம் அவளாக இருந்தால் அம்மா. அவனாக இருப்பின் அப்பா. 

மனதளவில் மண்டியிட்டு அவர்களிடம் நிறைய கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைப் பருவத்துக்கான அழகுகளை முதல் தொடுகை, முதல் வார்த்தை, அடம், அழுகை எல்லாவற்றையும் மறக்காமல் ஏதாவது ஒரு வடிவத்தில் பதிவு செய்யுங்கள். அவர்களின் விரல் பிடித்து நடக்க சம்மதியுங்கள்... உங்களது குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்வார்கள். ஒவ்வொரு குழந்தையும் மகிழ்ச்சியின் பிரதிநிதி. அத்தனை டென்ஷனும் அந்த குட்டிச் சிரிப்புக்கு முன் பனித்துளி. விளையாடி விளையாடி பறவையாகி, பட்டாம்பூச்சியாகி, கண்ணாடி மொட்டாகி காணாமல் போவீர்கள்! அட... கால் முளைத்த வானவில் இத்தனை ஜாலங்கள் செய்யுமா? செய்யும்! 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...